இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 73வது சுதந்திர தின கொண்டாட்டம் - 2021.02.04

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை திருநாடு சுதந்திரம் பெற்று அந்நிய ஆட்சியைத் தவிர்த்து தம்மைத் தாமே ஆளத்தொடங்கி இன்றுடன் 73 ஆண்டுகள். “சுபீட்சமான எதிர்காலம் சௌபாக்கியமான தாய்நாடு” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் அனைத்து அரச நிறுவனங்களிலும் இன்று சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் எமது நாட்டின் 73வது சுதந்திரத்தினை கொண்டாடும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வானது இன்று(2021.02.04) எமது பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் பங்குபற்றியிருந்தனர். மு.ப 8.00 மணியளவில் தேசிய கொடியேற்றப்பட்டதோடு தேசிய கீதமும் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.






அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வழிகாட்டலிலே “வளமான நாடும் சுபீட்சமான எதிர்காலமும்” எனும் தொனிப் பொருளில் அமையப் பெற்ற சுதந்திர தின வைபவத்திலே பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்கள் உரையாற்றுகையில்...


எமது நாடானது சகல வளங்களையும் கொண்டமைந்த நாடாகும் எமது வளங்களை பயன்படுத்தி ஒரு சுபீட்சமான எதிர்காலத்தினை எம்மால் உருவாக்கிக் கொள்ள முடியும். அரச சேவையானது அவ்வாறானதொரு சுபீட்சமான எதிர்காலத்தினை நோக்கியதான ஒரு சேவையாக அமையப்பெறல் வேண்டும். அந்த வகையில் அரச ஊழியர்களாகிய நாம் அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் வினைத்திறனுடனும் பொதுமக்களுக்கான சேவையினை நாம் வழங்கவேண்டும்.
மக்களுக்கான சேவையினை வழங்கி அவர்களினை வழிநடத்தி அவர்களுக்கான சிறந்ததொரு சௌபாக்கியமான சுபீட்சமான ஒரு எதிர்காலத்தினை உருவாக்கிக் கொடுக்கும் ஒரு பாரிய பொறுப்பு அரச ஊழியர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே நாம் அனைவரும் மக்களின் பொறுப்பாளர்களாவோம் மக்களுக்கான சிறந்த சேவையினை வழங்கி வழிநடத்தும் வழிகாட்டிகளாவோம். எனவே பொறுப்புடனும் ஆற்றலுடனும் வினைத்திறனானதொரு சேவையினை நாம் மக்களுக்கு வழங்க வேண்டியது அவசியமாகும்.
ஒவ்வொரு அரச ஊழியர்களும் தமக்கான மக்களுக்கான சேவைக் கடமைப்பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றுவார்களேயானால் மக்களின் பொருளாதாரமும் அவர்களது வாழ்வாதாரமும் சிறந்ததொரு சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நகர்த்தப்படும் என்பதில் ஐயமில்லை. எனவே இச் சுதந்திர தின வைபவத்திலே நாம் அனைவரும் பொறுப்புடனும் சேவை மனப்பாங்குடனும் வினைத்திறனானதொரு சேவையினை மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற எண்ணப்பாட்டினை வலுப்படுத்திக் கொள்வோம் என தனது கருத்து மொழிவினை முன்வைத்திருந்தார்.

சுதந்திர தின வைபவத்தோடு இச் சுதந்திர தினத்திலே பொது நிருவாக அமைச்சின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டதற்கு அமைவான “துன் பொக்குறு யோகய” எனும் தொனிப் பொருளில் அமைந்த மரநடுகை நிகழ்வும் காலை 9.29 மணியளவில் எமது பிரதேச செயலக வாளாகத்தில் இடம்பெற்றது. எமது நாட்டின் தேசிய மரமான நாகமரம் (Mesua nagassarium) எமது பிரதேச செயலக முன்றலில் நடப்பட்டதுடன் எமது பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 45 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் மரங்கள் வழங்கப்பட்டு அப் பிரிவுகளிலும் இம் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. அத்தோடு பிரதேச செயலக வளாகத்தில் பாரியதொரு சிரமதான நிகழ்வும் உத்தியோகத்தர்களினால் முன்னெடுக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.











