மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா – 2021.02.02

ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கி சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடுகின்றனர்.
பொங்கல் விழாவை தமிழர் தேசிய விழாவாக பலர் கருதுகின்றனர். பொங்கலை தமிழர்கள் சமயங்களைக் கடந்து கொண்டாடும் வழக்கமும் உள்ளது. கிறிஸ்தவர்கள் தங்கள் தேவாலயங்களில் கரும்புடன் பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். தமிழ் முஸ்லீம்களில் பல குடும்பங்களில் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கலுடன் 16 வகைக் காய்கறிகளைச் சமைத்துச் சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும், பொங்கல் நாளன்று வீட்டில் அசைவ உணவுகளை தவிற்கும் வழக்கமும் உள்ளது
இவ்வாறான பொங்கல் விழாவினை சிறப்பிக்கும் முகமாக எமது பிரதேச செயலகம் வருடா வருடம் ஒரு நன் நாளன்று ஒரு சிறப்பானதொரு கொண்டாட்ட விழாவாக கொண்டாடுவது வழக்கமாகும். COVID 19 காலகட்டமான இக் காலகட்டத்தில் வருடா வருடமாக நடாத்தப்படுகின்ற இப் பொங்கல் கொண்டாட்ட விழாவானது நடாத்துவதற்கு ஏற்றதான சூழ் நிலை அமையப் பெறவில்லை. எனினும் உழவர்களையும் அவர்கள் கொண்டாடும் இத் திருநாளை மதிக்கும் முகமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இன்று(2021.02.02) எமது பிரதேச செயலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதான ஒரு பொங்கல் கொண்டாட்ட நிகழ்வு இடம்பெற்றது. பாரம் பரியமாக உழவர்களால் கொண்டாடப்படும் இந் நிகழ்வினை அனைவரும் கொண்டாட வேண்டும் என்பதோடு உழவர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதினை அனைவரையும் உணரவைக்கும் நோக்கில் இவ் விழாவானது கொண்டாடப்பட்டு வருகின்றது.






இப் பொங்கல் விழா கொண்டாட்ட நன் நாளில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகமானது கல்விக்கு ஒளியூட்டும் வகையில் 2021 தை மாதம் தொடக்கம் சமூக நலன் விரும்பிகளின் அனுசரனையுடன் 'ஒளி பெற்று ஒளிர்வாய்' எனும் கல்வி மேம்பாட்டினை வலுப்படுத்தும் ஒரு திட்டத்தினை அமுல்படுத்தியது. முதற் கட்டமாக இத் திட்டத்திலே தெரிவு செய்யப்பட்ட 07 மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.







எமது மாணவர்களின் கல்வி மேம்பட வேண்டும் என்றும் குறித்த மாணவர்களின் கல்வி நடவடிக்கை முடியும் வரை அவர்கள் கல்வியை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனும் நோக்கினை மையப்படுத்தி மாதாந்தம் அவர்களது கற்றல் நடவடிக்கைகளுக்காக உதவித் தொகையொன்றை வழங்கும் திட்டமாக இத்திட்டம் அமைகின்றது.
இத் திட்டத்திற்கு அனுசரணை வழங்கிய தம்மை அடையாளப்படுத்தாத அனுசரணையாளர்கள் பாராட்டப்பட்டதோடு கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தும் இத் திட்டங்களை வரவேற்கும் நலன் விரும்பிகள் வரவேற்கப் படுவதாகவும் இப் பிரதேச செயலகம் சார்பாக பிரதேச செயலாளர் கருத்துமொழிவினை முன்வைத்தார்.






