2022ஆம் ஆண்டின் அலுவலக கடமைகளை ஆரம்பித்தலும் உத்தியோகத்தர்களை பாராட்டும் நிகழ்வும்
மலர்ந்துள்ள 2022ஆம் ஆண்டின் அலுவலக செயற்பாடுகளை ஆரம்பிக்கும் நிகழ்வு 03.01.2022 அன்று பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.
தேசியக்கொடியேற்றும் நிகழ்வுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் தேசிய கீதமானது உத்தியோகத்தர்களினால் இசைக்கப்பட்டதனை தொடர்ந்து மத இறைவணக்கமும் நிகழ்த்தப்பட்டது. முப் படையினர் உட்பட தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவுகூர்வதற்காக 02 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து உத்தியோகத்தர்கள் அனைவரும் சத்தியபிரமாணம் செய்ததோடு தமது புதிய வருடத்திற்கான கடமைப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டனர்.
களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாததார பரிசோதகரினால் கொவிட்-19 தொற்றுப்பரவலை தடுப்பதற்காக பொதுமக்களுக்குள்ள பொறுப்புக்களை வலியுறுத்தி சிறிய உரையொன்று நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேசசெயலாளரின் புத்தாண்டு வாழ்த்து அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தெரிவிக்கப்பட்டதோடு கடந்த வருடத்தில் வினைத்திறனான செயற்பாடுகளை எமது உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விதம் பற்;றி கூறியதோடு அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வழங்கப்பட்டது.மக்களுக்காக சேவை வழங்கும் வினைத்திறனான சேவையின் அவசியம் இவ் வருடமும் தேவையென்பதால் அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது பணியினை திறன் பட முன்னெடுக்க வேண்டுமெனவும் நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 'நீலப்பசுமை' எதிர்பார்ப்பினை நிவர்த்தி செய்ய வினைத்திறனாகவும் நேர்மையாகவும் விரைவாகவும் செயற்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் பிரதேசசெயலாளர் தமது கருத்துரையை முன் வைத்தார்.
கடந்த வருடத்தில் பிரதேச செயலகத்தின் வெற்றிப்பயணத்திற்காக முன்னின்று உழைத்த மற்றும் திறமைகளை வெளிக்காட்டிய உத்தியோகத்தர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் உதவி பிரதேசசெயலாளர் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர் உட்பட பதவிநிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தனர்.
இறுதி நிகழ்வாக அலுவலக வளாகத்தில் மரநடுகை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.