அரச சார்பற்ற நிறுவனங்களுடனான வேலைத்திட்டம், முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடல் - 16.02.2021

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களில் பல்வேறு வகையான பொதுமக்களுக்கு பயன் தரும் வகையிலான திட்டங்களை வடிவமைத்து செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது எமது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் 2021.02.16ம் திகதி இடம்பெற்றது.
இந் நிகழ்வில் AMCOR, OXFARM, CERI, YGRO, WDF, PALM FOUNDATION, PUHALIDAM மற்றும் LIFT போன்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், திட்டமிடல் பிரதி பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்கள், எமது பிரதேச செயலக கிளைகளின் பிரதிநிதிகள், திட்டமிடல் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



பிரதேச செயலகங்களை பொறுத்தவரை அரச சார்பற்ற நிறுவனங்களது சமூகம் சார்ந்த பங்களிப்பு இன்றியமையாததாக காணப்படுவதோடு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இந் நிறுவனங்களது பங்களிப்பு மாவட்ட மட்டத்தில் மிகவும் குறைவாகவும் குறிப்பாக எமது பிரதேச செயலக பிரிவில் மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றது.
ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது திட்டங்களை முன் மொழிந்து அத்திட்டங்களினூடாக பொதுமக்கள் பெற்றுக் கொள்ளும் பயன்கள் மற்றும் அதன் முன்னேற்ற அறிக்கைகள் உள்ளிட்ட விடயங்களை தெளிவுபடுத்தினர்.
ஓவ்வொரு நிறுவனங்களும் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றன மற்றும் அவற்றின் அடைவு மட்டங்கள் எவ்வாறு காணப்படுகின்றது என்பது தொடர்பான கருத்து முன் மொழிவுகளும் இங்கு ஆராயப்பட்டன. கருத்திட்டங்களினூடாக பொதுமக்களுக்கு நடாத்தப்படுகின்ற பயிற்சிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் பற்றியதான கலந்துரையாடலும் இடம்பெற்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது முன்னெடுக்கின்ற வேலைத்திட்டங்கள் யாவை? அவற்றின் கால இடைவெளிகள் மற்றும் அவற்றின் மூலம் பயன் பெறும் பொதுமக்கள், குடும்பங்களின் எண்ணிக்கை, கடந்தகால திட்டங்களினூடாக பயன்பெற்ற குடும்பங்களின் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது போன்றதான கருத்து பரிமாற்றங்கள் நிறுவனங்களின் பிரதிநிதிகளினால் தெளிவுபடுத்தப்பட்டன.


அரசானது பொதுமக்களின் பொருளாதாரத்தினையும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினையும் அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் போன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் பொதுமக்களின் பொருளாதாரத்தினையும் அவர்களது வாழ்க்கைத்தரத்தினையும் அபிவிருத்தி செய்வதற்காக முன்னெடுக்கும் செயற்திட்டங்கள் பாராட்டப்பட வேண்டியவையாகும். அச் செயற்திட்டங்கள் உரிய வகையில் பொதுமக்களிடம் கொண்டு செல்லப்பட்டு அதனூடாக கிடைக்கின்ற பயன்களை முழுமையாக அடையவைப்பது எமது கடமையாகும்.
பொது மக்களுக்கு பயன் தரும் வகையில் அமையப்பெறும் செயற்திட்டங்களை பிரதேச செயலாளர் வரவேற்றதோடு அவற்றின் பயனை பிரதேச செயலகத்தில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தராக செயற்படும் உத்தியேகத்தர்கள் அனைவரும் பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டியதான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டுமெனவும் கருத்து தெரிவித்தார்.



