கடற்கரையை அண்டிய சூழலினை சுத்தம் செய்தல் நிகழ்வு – 2020.12.08

மனிதனை சூழ்ந்துள்ள அனைத்தையும் சேர்த்து நாம் சூழல் என்கின்றோம். அதாவது மனிதனது அத்தியவசிய மேலதிக தேவைகள் எல்லாவற்றிகும் இருப்பிடமாக அமைவது சூழலேயாகும். சூழலுக்கும் மனிதனுக்குமிடையிலான தொடர்பு மிகவும் நெருக்கத் தன்மை வாய்ந்ததாக அமைகின்றது. இதனால் சூழலியல் மாற்றங்கள் மனிதனது வாழ்விலும் மனிதனுடைய செயற்பாடுகள் சூழலிலும் செல்வாக்கு செலுத்துவதை தவிர்க்க முடியாதுள்ளது. இன்று உலகெங்கும் சுற்றுச்சூழல் சீர்கேடு பெரும் அச்சுறுத்தலாக காணப்படுகின்றது. உயிரினங்கள் நல்ல நீரையோ, சுத்தமான காற்றையோ, சுகமான வாழ்வையோ நுகர முடியாது அவதியுறுகின்றன.

அந்த அச்சுறுத்தலிலிருந்து சூழலை பாதுகாக்கும் வகையில் இன்று(2020.12.08) சுற்றுப்புற சூழலை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் கோட்டைக்கல்லாறு பிரதேச கடற்கரை சூழலிலிருந்து ஓந்தாச்சிமடம் வரையான கடற்கரை சூழல் பகுதிகள் யாவும் சுத்தப்படுத்தும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டன.



இந் நிகழ்விலே பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம், AMCOR நிறுவனம், நிறுவன ஊழியர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொறுப்பான கிராம உத்தியோகத்தர்கள், பொது மக்கள் சேவை மையங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு கடற்கரை சூழலை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடற்கரையை அண்டியதாக உபயோகப்படுத்தப்படாமல் காணப்படுகின்ற கட்டிட அமைப்புக்களை பயன்படும் வகையிலும் பராமரிப்பதற்குரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதோடு அப் பகுதிகள் அனைத்தும் முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டன.
இச் சுத்தப்படுத்தல் செயற்பாடானது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சுகாதார வைத்திய பரிசோதகர் கண்காணிப்பின் கீழ் நடாத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நீர் நிலைகளில் மக்கள் போடும் கழிவுப் பொருட்கள், பிளாஸ்திக் பொருட்கள் காரணமாக கழிவு நீர் வழிந்தோட முடியாது தடைப்படுகின்றது. இதனால் நோய்க் காவிகளாக தொழிற்படும் இழையான், நுளம்பு என்பவற்றின் பெருக்கம் வாந்திபேதி, மலேரியா, டெங்கு, நெருப்புக்காய்ச்சல் போன்ற நோய்களையும் மக்களிற்கு ஏற்படுத்துகின்றது.
ஆகவேதான் இச் சூழல் மாசடைவதை தடுப்பது என்பது இன்று முக்கியமான, அத்தியாவசியமானதொரு நடவடிக்கையாக உள்ளது. இப்பாரிய பொறுப்பு, விளைவை ஏற்படுத்திய மக்களாலேயே கொஞ்சம் கொஞ்சமாக சீர்படுத்தப்பட வேண்டியுள்ளது. அந்தவகையில் சுத்தம் சுகம் தரும் என்பதை சூழலியலிலும் கவனத்திற் கொண்டு அதனை பாதுகாப்பதற்காக குப்பை கூளங்களை கண்ட கண்ட இடங்களில் போடுதலை தவிர்ப்பதோடு அதற்கென உரிய இடங்களில் (குப்பைத்தொட்டியில்) போட வேண்டும்.

அவற்றை உடனுக்குடன் அப்புறப்படுதுவதற்கான ஏற்பாடுகளை உள்ளூராட்சி மன்றங்களினால் மேற்கொள்ளப்படுகின்றன எனவே மக்கள் சூழலை பாதுகாக்கும் வகையில் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது.
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.
இயற்கையை நேசிப்போம்! இயன்றதை யாசிப்போம்!



